Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்ட்கென் காடு சண்டை

ஆள்கூறுகள்: 50°42′31″N 6°21′46″E / 50.70861°N 6.36278°E / 50.70861; 6.36278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊர்ட்கென் காடு சண்டை
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி

ஊர்ட்கென் நகர விடுதிக்கு முன்பு ஒரு அமெரிக்க ராணுவ ஜீப் நிற்கிறது
நாள் செப்டம்பர் 19, 1944 – பெப்ரவரி 10, 1945
இடம் 50°42′31″N 6°21′46″E / 50.70861°N 6.36278°E / 50.70861; 6.36278
ஜெர்மானிய-பெல்ஜிய எல்லை
டிசம்பர் 16, 1944 வரை யாருக்கும் வெற்றியில்லை; அதன் பின் பல்ஜ் சண்டை தொடங்கியதால் மந்த நிலை உருவானது. பெப்ரவரி 1945ல் சண்டை மீண்டும் தொடங்கிய போது அமெரிக்கப் படைகள் வெற்றியடைந்தன
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா  ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா கோர்ட்னி ஹோட்ஜஸ் (முதலாவது அமெரிக்க ஆர்மி)
ஐக்கிய அமெரிக்கா லென்னர்ட் . டி. கெரோவ் (5வது கோர்)
ஐக்கிய அமெரிக்கா ஜோசப் காலின்ஸ் (7வது கோர்)
நாட்சி ஜெர்மனி வால்டர் மோடல்
பலம்
120,000 80,000
இழப்புகள்
32,000[1]-33,000 பேர் (12,000 பேர் கொல்லப்பட்டனர்)[2][3] 28,000 பேர் (12,000 பேர் கொல்லப்பட்டனர்)[3]

ஊர்ட்கென் காடு சண்டை (ஆங்கிலம்: Battle of Hürtgen Forest, இடாய்ச்சு: Schlacht im Hürtgenwald) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் ஜெர்மானிய அமெரிக்க படையினரிடையே நிகழ்ந்த ஒரு சண்டைத் தொடரைக் குறிக்கிறது. பெல்ஜிய-ஜெர்மானிய எல்லைப்பகுதியில் உள்ள ஊர்ட்கென் (யூர்ட்கென்) காட்டுப் பகுதியில் செப்டம்பர் 140, 1944 - பெப்ரவரி 10, 1945 காலகட்டத்தில் நடந்த இச்சண்டை இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய மண்ணில் அதிக நாட்கள் தொடர்ந்து நடந்த சண்டையாகும். மேலும் வரலாற்றில் அமெரிக்கத் தரைப்படையினர் தொடர்ச்சியாக அதிக நாட்கள் ஈடுபட்ட சண்டையும் இதுவே.

1944 இன் பிற்பகுதியில் நேச நாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியின் பிடியில் நான்கு ஆண்டுகளாய் சிக்கியிருந்த மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளை மீட்டனர். பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஜெர்மானியப் படைகள் மிகப்பெரும்பாலும் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப் பட்டன. அடுத்து ஜெர்மனி மீது நேரடியாகத் தாக்குவது நேச நாட்டுப் படைகள் திட்டம். ஜெர்மனியின் எல்லையிலிருந்த இரைன் ஆற்றையும் உரூர் ஆற்றையும் கடக்க பல வழிகளில் நேச நாட்டுப் படைகள் முயன்றன. இதற்காக முதலில் வகுக்கப்பட்ட மேல்நிலை உத்தி மார்க்கெட் கார்டன் நடவடிக்கையின் தோல்வியால் பலனற்றுப் போனது. அடுத்து ஆஹன் இடைவெளி வழியாக ஜெர்மனிக்குள் ஊடுருவ ஆஹன் சண்டை தொடங்கியது. அதில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகளைப் பக்கவாட்டிலிருந்து ஜெர்மானியப் படைகள் தாக்காமல் காக்க, அமெரிக்கத் தளபதிகள் ஊர்ட்கென் காட்டுப் பிரதேசத்தைக் கைப்பற்ற முயன்றனர். ஊர்ட்கென் காட்டுப்பகுதி ஜெர்மானியர்களின் எதிர்கால உத்திக்கு மிக அவசியமானதாக இருந்தது. அடுத்து நிகழ்த்த அவர்கள் திட்டமிட்டிருந்த ஆர்டென் தாக்குதலுக்கு (பல்ஜ் சண்டை) இப்பகுதியே படைகளை ஒழுங்கமைக்கும் பகுதியாகத் (staging area) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. மேலும் உரூர் ஏரியின் முகப்புப் பகுதியிலுள்ள ஷ்வாம்மானுவேல் அணைக்கட்டுக்குச் செல்லும் சாலைகள் ஊர்ட்கென் வழியாகச் சென்றன. அந்த அணைக்கட்டைத் திறந்து விட்டு உரூர் ஆற்றில் வெள்ளம் பாயச்செய்து ஆற்றைக்கடப்பத்தைத் தடுக்க முடியும். இவ்விரு காரணங்களால் ஊர்ட்கென் பகுதி ஜெர்மானியருக்கு அதிமுக்கியமானதாக இருந்தது.

செப்டம்பர் 1944 இல் அமெரிக்கப் படைகள் ஊர்ட்கன் தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மானியர்களின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் சண்டையில் யாருக்கும் வெற்றியில்லாமல் இழுபறி நிலை ஏற்ப்ட்டது. சிக்ஃபிரைட் கோட்டின் அரண்நிலைகளைப் பயன்படுத்தி ஜெர்மானியர்கள் அமெரிக்கப்படைகளுக்குப் பெரும் இழப்புகளை விளைவித்தனர். இச்சண்டையில் 33,000 அமெரிக்கர்களும் 28,000 ஜெர்மானியரும் மாண்டனர். ஆஹன் சண்டையில் வெற்றி கிட்டினாலும், உரூர் ஆற்றைக் கடக்கும் அமெரிக்க முயற்சி தோல்வியடைந்தது. டிசம்பர் 17 ஆம் தேதி பல்ஜ் சண்டை தொடங்கியதால் இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. அச்சண்டை முடிவு பெறும்வரை (பெப்ரவரி 1945) வரை ஊர்ட்கென் காடு அமெரிக்கர் வசமாகவில்லை

பின்புலம்

[தொகு]
ஊர்ட்கென் பகுதி வரைபடம்

1944 இல் ஜெர்மானியப் படைகள் ஐரோப்பாவின் மேற்கு, கிழக்கு ஆகிய இருபோர்முனைகளிலும் பின்வாங்கிக் கொண்டிருந்தன. மேற்கில் நேசநாட்டுப் படைகள் பிரான்சு, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தை ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டபின்னர் ஜெர்மனியைத் தாக்கத் தயாராகின. ஜெர்மானிய-பிரெஞ்சு எல்லையில் அமைந்திருந்த பலமான ஜெர்மானிய எல்லை அரண்கோடான சிக்ஃபிரைட் கோட்டை உடைத்து முன்னேற பல இடங்களில் நேசநாட்டுப்படைகள் முயன்றன. நெதர்லாந்து வழியாக ரைன் ஆற்றைக் கடந்து ஜெர்மனியைத் தாக்க மேற்கொள்ளப்பட்ட மார்க்கெட் கார்டன் நடவடிக்கையின் தோல்வி ஒரு வழியை அடைத்து விட்டது. ஆஹன் இடைவெளி வழியாக ஜெர்மனி மீது படையெடுக்க அடுத்த முயற்சி ஆரம்பமாகியது.

ஆஹன் நகரைத் தாக்கிக் கொண்டிருந்த அமெரிக்க முதலாம் ஆர்மியை ஜெர்மானியப் படைகள் ஊர்ட்கென் காடுகள் வழியாக பக்கவாட்டில் தாக்கலாம் என்று அமெரிக்கத் தளபதிகள் அஞ்சினர். மேலும் உரூர் ஆற்றை நேச நாட்டுப்படைகள் கடக்கும் போது அணைக்கட்டைத் திறந்து ஆற்றில் வெள்ளத்தை ஏற்படுத்த ஜெர்மானியர் முயல்வர் என்தால், அதைக் கைப்பற்ற அமெரிக்கத் தளபதிகள் திட்டமிட்ட்னர். ரூர் அணைக்கட்டுக்குச் செல்லும் வழி ஊர்ட்கென் காடுகள் வழியாகச் சென்றது. இதனால் ஊர்ட்கென் காடுகளை முதலில் கைப்பற்றுவது அவசியமானது. ரூர் ஆற்றுக்கும் ஆஹன் நகருக்கும் இடைப்பட்ட அடர்ந்த காட்டுப்பகுதிதான் ஊர்ட்கென். சிக்ஃபிரைட் கோட்டின் பல அரண்நிலைகள் இந்தக் காட்டில் அமைந்திருந்தன. எந்திர ஊர்திகளும் டாங்குகளும் எளிதில் போக முடியாத அளவுக்கு மரங்கள் அடர்ந்திருந்தன. 1944 இன் பிற்பகுதியில் கடும் பனிப்பொழிவால் ஊர்ட்கென் வழியாகச் சென்ற சில பாதைகளும் அடைபட்டிருந்தன.

இக்காட்டினுள் ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் வலுவான நிலையில் இருந்தன. அமெரிக்கர்களின் அதிகமான எண்ணிக்கையும், வலிமையான டாங்குப்படைகளும் காட்டு நிலப்பரப்பில் பலனற்றுப் போயின. மேலும் உறைந்த சாலைகள் வழியாகத் தளவாடங்களை ஊர்ட்கெனுக்கு கொண்டு செல்வதும் எளிதான காரியமில்லை. தளவாடங்களைப் படைவீரர்கள் தாங்களே சுமந்து செல்ல வேண்டியதாயிற்று. மேலும் ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் இப்பகுதியில் சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தால், நிலப்பரப்பையும், அதில் சண்டையிடும் உத்திகளையும் நன்கு அறிந்திருந்தன. அமெரிக்கப் படைகளுக்கு இம்மாதிரியான நிலப்பரப்பில் போரிட போதுமான அனுபவம் இல்லை.

சண்டையின் போக்கு

[தொகு]

ஊர்ட்கென் காட்டுக்கான சண்டை இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

நவம்பர் 22ல் குண்டு வீசும் ஒரு ஜெர்மானிய பீரங்கி

முதல் கட்டம்

[தொகு]

ஊர்ட்கென் காட்டுக்கான சண்டையின் முதல் கட்டம் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நீடித்தது. ஜெர்மானியப் படைகளுக்குத் தளவாடங்கள் கொண்டு செல்லப்படும் பாதையில் அமைந்திருந்த ஷ்மிட் என்ற ஊரைத் தாக்கிக் கைப்பற்ற அமெரிக்கப் படைகள் இந்த கட்டத்தில் முயன்றன. இரு மாதங்கள் நடந்த கடும் சண்டையில் இரு தரப்புக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது. மெதுவாக முன்னேறிய அமெரிக்கப்படைகள் நவம்பர் 3ம் தேதி ஷ்மிட் நகரைக் கைப்பற்றின. ஆனால் உடனடியாக ஜெர்மானியர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தி அமெரிக்கப்படைகளைப் பின்வாங்கச் செய்தனர். கூடுதல் படைகளின் உதவியுடன் நவம்பர் 10ம் தேதி ஷ்மிட் அமெரிக்கர் வசமானது.

இரண்டாம் கட்டம்

[தொகு]
பெப்ரவரி 15, 1945ல் ஊர்ட்கென் காடு வழியாகச் செல்லும் ஒரு அமெரிக்க தரைப்படை வண்டி

இரண்டாவது கட்டத்தில் ஊர்ட்கென் காட்டின் வடபகுதியை ஆக்கிரமித்து, ஊர்ட்கென் நகரைக் கைப்பற்றி உரூர் ஆற்றை அடைய அமெரிக்கப் படைகள் முயன்றன. இந்தப் பொறுப்பு அமெரிக்க ஏழாவது கோரிடம் கொடுக்கப்பட்டது. நவம்பர் 16 ஆம் தேதி காட்டினுள் அமெரிக்கப்படைகள் முன்னேறத் தொடங்கின. கடும் ஜெர்மானிய எதிர் தாக்குதலால் மிக மெதுவாகவே அமெரிக்கப்படைகளால் முன்னேற முடிந்தது. அடர்ந்த காட்டினுள் டாங்குகளைப் பயன்படுத்த முடியாததால் அமெரிக்கத் தரைப்படையினருக்கு நிறைய இழப்புகள் ஏற்பட்டன. ஏழாவது கோரின் முன்னேற்றம் நவம்பர் 21ல் முற்றிலும் தடைபட்டது. காட்டைக் கைப்பற்றும் பணி ஐந்தாவது கோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. டிசம்பர் 16 வரை சண்டை நீடித்தது. ஊர்ட்கென் காட்டுப்பகுதி மெல்ல மெல்ல அமெரிக்கர்கள் வசமாகத் தொடங்கியது. ஆனால் டிசம்பர் 16ம் தேதி, ஜெர்மானியப் படைகள் தங்களது ஆர்டென் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியதால், மூன்று மாதங்களாக ஊர்ட்கெனில் நடந்து வந்த சண்டை தேவையற்றுப் போனது. இரு தரப்பினரின் கவனமும் புதிய களமுனைக்குத் திரும்பியதால், ஊர்ட்கெனில் சண்டை ஓய்ந்தது. ஜெர்மானியத் தாக்குதலை முறியடிக்க அமெரிக்கர்களுக்கு மேலும் இரு மாதங்களாயின. இதற்குள் ஊர்ட்கெனிலிருந்த ஜெர்மானியப் படைகள் பெரும்பாலும் பின் வாங்கிவிட்டன. பெப்ரவரி 1945 இல் ஊர்ட்கெனில் மீண்டும் தங்கள் தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கர்கள் எளிதில் காட்டையும் சுற்றியிருந்த ஊர்களையும் கைப்பற்றினர்.

தாக்கம்

[தொகு]
ஊர்ட்கென் சண்டையில் இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னம்

ஊர்ட்கென் காடு சண்டை இரண்டாம் உலகப் போரின் தேவையற்ற சண்டைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடினமான நிலப்பரப்பில், தயாரான நிலையில் உள்ள பாதுகாப்புப் படைகளை எதிர்த்து தாக்கினால் பெரும் சேதம் உண்டாகும் என்று தெரிந்தும் ஊர்ட்கென் காட்டைக் கைப்பற்ற முயன்றனர் அமெரிக்கத் தளபதிகள். ஆனால் அக்காடு யார் வசமிருந்தாலும் அதனால் மேற்குப் போர்முனை நிலவரத்தில் எந்தப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காது. அக்காட்டைக் கைப்பற்ற அதிக அளவில் உயிர்களைப் பலி கொடுத்தது அநாவசியமான செயல் என்று பல ராணுவ வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். மேலும் ஊர்ட்கென் சண்டை நடந்துகொண்டிருக்கும் போதே பல்ஜ் சண்டை தொடங்கியதால், ஊர்ட்கெனைக் கைப்பற்றும் தேவையில்லாது போனது. அதுவரை ஏகப்பட்ட இழப்புகளுடன் மேற்கொண்ட முயற்சி வீணானது. ஊர்ட்கென் சண்டையில் இரு தரப்பிலும் தலா 12,000 பேர் வரை கொல்லப்பட்டார்கள். மேலும் இரு தரப்பிலும் தலா இருபதாயிரம் பேர் காயமடைந்தனர்.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Mac Donald, Charles B. (1984). The Siegfried line campaign. Center of Military History, United States Army.
  2. The legacy of the Purple Heart
  3. 3.0 3.1 "World War II Database".

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்ட்கென்_காடு_சண்டை&oldid=3235817" இலிருந்து மீள்விக்கப்பட்டது