நகிப் மஹ்ஃபூஸ்
நகிப் மஹ்ஃபூஸ் | |
---|---|
பிறப்பு | நகிப் மக்ஃபசு نجيب محفوظ திசம்பர் 11, 1911 கெய்ரோ, எகிப்து |
இறப்பு | ஆகத்து 30, 2006 கெய்ரோ, எகிப்து | (அகவை 94)
தொழில் | புதின எழுத்தாளர் |
தேசியம் | எகிப்து |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்துக்கான நோபல் பரிசு (1988) |
நகியுப் மக்ஃபசு (Naguib Mahfouz: அரபி: نجيب محفوظ) டிசம்பர் 11, 1911 – ஆகத்து 30, 2006 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஓர் எகிப்திய எழுத்தாளர் ஆவார். 1988 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இருத்தலியல் கோட்பாட்டு மைய்ய [1] முதல் அரபு இலக்கிய எழுத்தாளரான தவ்பீக் அல் அக்கீமின் சமகாலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். தன்னுடைய எழுபது வருட வாழ்க்கையில் இவர் 34 நாவல்கள், 350 சிறுகதைகள், பனிரண்டுக்கும் மேர்பட்ட திரைக்கதைகள், ஐந்து நாடகங்கள் என எழுதி வெளியிட்டுள்ளார். இவருடைய பல படைப்புகள் எகிப்திய மொழியிலும் பல்வேறு வெளிநாட்டு மொழிகளிலும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.
இளமைப்பருவமும் கல்வியும்
[தொகு]கெய்ரோவின் இடைக்கால பாத்திம கலீபகத்தில் 1911 ஆம் ஆண்டு ஒரு குறைந்த நடுத்தர வர்க்க இசுலாமியக் குடும்பத்தில் மக்ஃபசு பிறந்தார். ஐந்து ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளுமாக ஏழு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் இவர் இளைய பிள்ளையாக ஏழாவதாகப் பிறந்தவர் ஆவார். இவர் பிறப்பின் போது மருத்துவம் செய்த மருத்துவரான பேராசிரியர் நகிப் பாசா மக்ஃபசு (1882-1974) என்பவரின் பெயரைத் தழுவியே மக்ஃபசுக்கும் பெயரிடப்பட்டது. அனைவரும் இவரைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள் என்பதால் மக்ஃபசு மட்டுமே அவ்வீட்டில் குழந்தையாக வளர்ந்தார்.
கெய்ரோவின் இரண்டு பிரபலமான மாவட்டங்களில் மக்ஃபசின் குடும்பம் வாழ்ந்தது. முதலில் பழைய கெய்ரோ நகரத்தில் உள்ள கமாலேயா பகுதிக்கு அடுத்திருந்த பேட் அல்-காடி பகுதியில் இவர்கள் குடியிருந்தனர். இக்குடும்பம் 1924 ஆம் ஆண்டில் அங்கிருந்து இடம்பெயர்ந்து பழைய கெய்ரோவிற்கு வடக்கில் உருவாகியிருந்த புதிய புறநகர் பகுதியான அபாசியாவிற்கு வந்து சேர்ந்தது. இவ்விரு பகுதிகளுமே மக்ஃபசின் பிற்கால எழுத்துக்களுக்கான பின்புலங்களாக அமைந்தன. பழமை விரும்பியான மக்ஃபசின் தந்தை அப்டெல்-அசீசு ஒரு குடிமைசார்பு அலுவலர் ஆவார். மக்ஃபசும் பிற்காலத்தில் அவரது தந்தையின் பழமைவாத வழியையே 1934 களில் பின்பற்றினார். மக்ஃபசின் தாய் பாத்திமா ஓர் அல் அசார் சேக்கான முசுதபா கசீசியாவின் மகள் ஆவார், பாத்திமா கல்வியறிவு பெறாதவராக இருந்தாலும் கூட எகிப்திய அருங்காட்சியகம் மற்றும் பிரமிடுகள் போன்ற கலாச்சார இடங்களுக்கு பல முறை மக்ஃபசை அழைத்துச் சென்று அறிவூட்டினார் [2].
மக்ஃபசின் குடும்பம் இசுலாம் மதத்தை ஒழுங்காகக் கடைப்பிடித்து வாழ்க்கை நடத்திய தீவிர இசுலாமியக் குடும்பமாகும். இதனால் மக்ஃபசு இறுக்கமான இசுலாமியப் பின்னணியிலேயே வளர்க்கப்பட்டார். பிற்காலப் பேட்டியொன்றில் தனது குடும்பத்தின் மதச் சூழல் பற்றிக் குறிப்பிட்ட அவர், அக்குடும்பத்திலிருந்து ஒரு கலைஞன் உருவாவதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார் [2].
அக் காலத்தில் மக்ஃபசுக்கு ஏழு வயதாக இருந்தபோதே 1919 ஆம் ஆண்டில் நிகழ்ந்த எகிப்தியப் புரட்சி அவர் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. ஆண்களும் பெண்களுமாக புரட்சியில் ஈடுபட்ட புரட்சியாளகள் மீது பிரித்தானியப் படைவீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதை இவர் சன்னல் கம்பிகளுக்கு பின்னால் நின்று கவனித்துள்ளார். பிற்காலத்தில் எகிப்துப் புரட்சியைப் பற்றி குறிப்பிடும்போது, சிறுவயதில் தனது பாதுகாப்புக் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது 1919ன் புரட்சியே எனக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப காலத்திலேயே மக்ஃபசு விரிவாக வாசிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார். அபிசு நசீப், தாகா உசைன், சலாமா மவுசா போன்ற எச்சரிக்கை அறிவாளிகளின் எழுத்துகள் இவரை மிகவும் பாதித்தன [3].
இடைநிலைக் கல்வியை முடித்த பின்னர் மக்ஃபசு 1930 ஆம் ஆண்டில் தற்போது கெய்ரோ பல்கலைக்கழகம் என்றழைக்கப்ப்படும் எகிப்திய பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு இவர் 1934 இல் தத்துவவியல் பட்டம் பெற்றார். 1936 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டத்திற்கான தத்துவவியல் படிப்பிற்காக ஓர் ஆண்டை செலவழித்த பின்னர் தன்னுடைய படிப்பை கைவிட்டார். ஒரு தொழில்முறை எழுத்தாளராக மாறுவது என முடிவெடுத்தார். அல்-ரிசாலாவில் ஒரு பத்திரிகையாளராகச் சேர்ந்து பணியாற்றினார், மேலும் எல்-இலால் மற்றும் அல்-அக்ரம் போன்ற இதழ்களுக்காக சிறுகதைகள் எழுதினார்.
அரசுப்பணி
[தொகு]1934 ல் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றபின் மக்ஃபசு எகிப்திய அரசுப் பணியில் சேர்ந்தார். அங்கு அவர் பல பதவிகளில் பணிபுரிந்து 1971 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். முதலில் அவர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஓர் எழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் 1938 இல் எகிப்து இசுலாமிய நிவாரண அமைச்சக அலுவலகத்தில் ஒரு நாடாளுமன்ற செயலாளராக பணிபுரிந்தார். 1945 ஆம் ஆண்டில் அல் குயர் மாசோலியம் நூலகத்திற்கு மாறுதல் கோரி மாறுதல் பெற்றுச் சென்றார். அங்கு அவர் தனது இளமைப்பள்ளி குடியிருப்பாளர்கள் சிலரை "நல்ல கடன்கள் திட்டத்தின்" பகுதியாக நேர்காணல் செய்தார்[4]. 1950 களில் திரைப்படத்துறை தணிக்கை செய்யும் அலுவலகத்தில் இயக்குனராகப் பணியாற்றினார். இறுதியாக கலாச்சார அமைச்சகத்திற்கு ஆலோசகராகவும் பணியமர்த்தல் இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்[5].
எழுத்துப்பணி
[தொகு]34 நாவல்கள், 350 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பனிரெண்டுக்கும் மேற்பட்ட திரைக் கதைகள், ஐந்து நாடகங்கள் என மக்ஃபசு தன்னுடைய 70 வயது வாழ்க்கையில் பல நூல்களை எழுதிக் குவித்து வெளியிட்டுள்ளார். தி கெய்ரோ டிரைலோகி என்ற படைப்பு மக்ஃபசுவின் மிகச் சிறந்த நாவலாகும். முதல் உலகப்போரில் தொடங்கி 1952 ஆம் ஆண்டு இராணுவம் அரசர் பாரூக்கைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தநாள் வரை கெய்ரோவில் வாழ்ந்த மூன்று தலைமுறை மக்களை பிரதிபலிப்பதாக இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. புத்தக வெளியீட்டாளர் டார் அல்-மா ஆரெஃப் குழுவின் உறுப்பினராக மக்ஃபசு இருந்தார். இவருடைய பல நாவல்கள் அல்-அக்ரமில் வெளியிடப்படுவது தொடர்ந்தது. மேலும் அவரது நூல்கள் அவருடைய வார பத்திரிகையின் ஒரு பகுதியான "பாயிண்ட் ஆஃப் வியூ" என்ற பகுதியில் வெளியாகின. நோபல் பரிசு பெருவதற்கு முன்பு இவரது நாவல்களில் ஒரு சில மட்டுமே மேற்கு உலகினருக்கு அறிமுகமாயிருந்தன [6].
எழுத்து நடையும் களமும்
[தொகு]மக்ஃபசின் ஆரம்ப காலப் படைப்புகள் கெய்ரோவில் உருவாகின. அபாத அல் அக்தர் (1939), ரேடோபிசு (1943), கிஃபாவும் திஃபாவும் (1944) ஆகிய மூன்று நாவல்களும் வரலாற்று நாவல்களாகும். தன்னுடைய 30 நாவல்களில் சொல்லப்படாதவை எனக் கருதியவற்றையெல்லாம் இந்நூல்களில் இடம்பெறச் அவர் நிறைவு செய்தார். சர் வால்டர் இசுகாட்டின் (1771-1832) எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எகிப்து முழுவதையும் தொடர்ச்சியான புத்தகங்களில் எழுத வேண்டுமெனத் திட்டமிட்டார். இருப்பினும், மூன்றாவது தொகுதியை எழுதிக் கொண்டிருக்கும் போதே மக்ஃபசுவிற்கு அந்த ஆர்வம் குறைந்தது. சாதாரண மக்களின் சமூக மாற்றத்தில் உளவியலின் பாதிப்புகளை வெளிப்படுத்தக்கூடிய தற்கால விருப்பத்திற்கேற்ப தனது விருப்பத்தையும் மாற்றிக் கொண்டார் [7].
மக்ஃபசுவின் உரைநடை இலக்கியம் அவரது கருத்துக்களின் தெளிவின் வெளிப்பாடுகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய எழுத்துக்களில் சமத்துவம், ஓரினச்சேர்க்கை மற்றும் கடவுள் உட்பட பரந்தளவிலான தலைப்புகள் உள்ளடங்கியிருந்தன. இந்த தலைப்புகளில் எழுதுவது எகிப்தில் அக்காலத்தில் தடை செய்யப்பட்டிருந்தது [7]. அவரது படைப்புகளில், 20 ஆம் நூற்றாண்டில் தனது நாடு அடைந்திருந்த வளர்ச்சிகளை அவர் விவரித்திருந்தார். கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் பாதிப்பால் ஏற்பட்டிருந்த மாற்றங்களுடன் நாட்டின் அறிவார்ந்த மற்றும் கலாச்சாரப் பெருமைகளை இணைத்தார். மேற்கத்திய துப்பறியும் கதைகள், உருசிய மரபுக் கதைகள் மற்றும் மார்செல் பிரவுசுட், பிரான்சு காஃப்கா மற்றும் யேம்சு சாய்சு போன்ற நவீன எழுத்தாளர்களின் படைப்புகளால் எகிப்து அல்லாத கலாச்சார இலக்கியத்தில் அவரது சொந்த இலக்கிய வெளிப்பாடு தொடங்கியது.
மக்ஃபசின் கதைகள் பெரும்பாலும் கெய்ரோவின் மிகப்பெரும்பாலான மக்கள் தொகை மிகுந்த நகரங்களிலேயே நிகழ்கின்றன. அங்குள்ள சாதாரண மக்களே அவரது லதைகளை ஆக்ரமிக்கின்றனர். மேலும் இச்சாதாரண மக்கள் சமுதாயத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மேற்கத்திய மதிப்புகளின் சோதனைகளை சமாளிக்க முயற்சி செய்கின்றனர் [7]. 1950 களில் மக்ஃபசின் மையப் பணியாக அமைந்தது தி கெய்ரோ ட்ரைலோகி நாவல் ஆகும், சூலை புரட்சிக்கு முன்பே இவர் இந்நாவலை முடித்தார். இவருடைய நாவல்களின் தலைப்புகள் பேலசு வாக், பேலசு ஆப் டிசையர், சுகர் சிடிரீட் போன்ற தெருக்களின் பெயர்களாகவே இருந்தன. அவர் வளர்ந்த கெய்ரோவின் பகுதிகளில் இவருடைய கதைகள் அமைக்கப்பட்டன. முதல் உலகப்போரில் தொடங்கி 1952 ஆம் ஆண்டு இராணுவம் அரசர் பாரூக்கைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தநாள் வரை கெய்ரோவில் வாழ்ந்த பாட்ரியார்க் அல் சயத் அகமது அப்டெல் கவாத்தும் அவருடைய குடும்பமும் அடைந்த மூன்று தலைமுறை மாற்றங்களை பிரதிபலிப்பதாக இவருடைய நாவல் எழுதப்பட்டுள்ளது. பிரபலமான இவருடைய நாவலான தி எகிப்து டிரைலோகியை முடித்தபிறகு சிலகாலம் இவர் எழுதுவதை நிறுத்தியிருந்தார். 1952 இல் யமால் அப்துல் நாசிர் முடியாட்சியை தூக்கி எறிந்ததால் இவர் ஏமாற்றமடைந்தார், 1959 ஆம் ஆண்டில் மீண்டும் நூல்களை வெளியிடத் தொடங்கினார், பின்னர் புதிதாய், சிறுகதைகள், பத்திரிகைகள், நினைவுச்சின்னங்கள், கட்டுரைகள் மற்றும் திரைக்கதைகள் என பிரமாண்டமாக எழுதி வெளியிடத் தொடங்கினார் [7]. நவீன வரலாற்றில் நாசர் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவர் என 1998 ஆம் ஆண்டு நேர்காணலில் இவர் குறிப்பிட்டுள்ளார் சூயசு கால்வாயை நாசிர் தேசியமயமாக்கிய பின்னர் அவரை முழுமையாக மக்ஃபசு பாராட்டத் தொடங்கினார் [8].
தார்தரா ஃபாவுக் அல் நில் என்பது அவரது மிகவும் பிரபலமான நாவல்களில் ஒன்றாகும். அன்வர் அல்-சதாத் ஆட்சியின் போது இந்நாவல் பின்னர் ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டது. நாசிர் சகாப்தத்தில் எகிப்திய சமுதாயத்தின் சீரழிவு அடைந்தது என்பதை இந்த கதை விமர்சிக்கின்றது. முன்னாள் குடியரசுத் தலைவர் நாசிரை நேசித்த எகிப்தியர்களைத் தூண்டுவதை தவிர்க்க சடாத் இத்திரைப்படத்தைத் தடை செய்தார். 1990 களுக்கு முன்னர் இத்திரைப்படத்தின் பிரதிகளைக் கண்டுபிடிக்க கடினமாக இருந்தது. சில்ட்ரன் ஆப் தி கபிலாவி என்பது மக்ஃபசின் அறியப்பட்ட சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். , குடும்பத்தலைவரான கபிலாவி மற்றும் அவரது குழந்தைகள், கெய்ன், ஆபேல், மோசே, இயேசு, மற்றும் முகமது ஆகியோர் சராசரி எகிப்தியர்களாக இப்படைப்பை அலங்கரிக்கின்றனர். 1960 களில் மக்ஃபசு மேலும் தனது இருத்தலியல் நாவல்களில் மனிதகுலம் கடவுளிடமிருந்து மேலும் விலகிச் செல்கிறார்கள் என்ற கருத்தை மேலும் வளர்த்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Haim Gordon. "Naguib Mahfouz's Egypt: Existential Themes in His Writings". எண்ணிம ஆவணச் சுட்டி:10.1336/0313268762 (inactive 2017-08-13). Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-04-26.
{{cite web}}
: CS1 maint: DOI inactive as of ஆகத்து 2017 (link) - ↑ 2.0 2.1 Rasheed El-Enany (25 June 1993). Naguib Mahfouz: The Pursuit of Meaning. Psychology Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-07395-0. பார்க்கப்பட்ட நாள் 25 September 2012.
- ↑ Charlotte El Shabrawy (Summer 1992). "Naguib Mahfouz, The Art of Fiction No. 129". The Paris Review. http://www.theparisreview.org/interviews/2062/the-art-of-fiction-no-129-naguib-mahfouz. பார்த்த நாள்: September 25, 2012.
- ↑ El-Enany, Rasheed. "Naguib Mahfouz: His Life and Times". கெய்ரோ:AUC Press, 2007. pp 170-174
- ↑ Tore Frängsmyr; Sture Allén (1993). Nobel Lectures: Literature, 1981-1990. World Scientific. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-02-1177-6. பார்க்கப்பட்ட நாள் 26 September 2012.
- ↑ "The Novel~Tea Book Club discussion". GoodReads. பார்க்கப்பட்ட நாள் 24 October 2013.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Naguib Mahfouz (1911–2006)". The American University in Cairo Press. AUC Press. பார்க்கப்பட்ட நாள் 26 October 2013.
- ↑ Hamad, Mahmoud. (2008) When the Gavel Speaks: Judicial Politics in Modern Egypt பரணிடப்பட்டது 2016-05-22 at the வந்தவழி இயந்திரம். p. 96 (Hamad cites an interview of Mahfouz by Al-Ahram Weekly in September 1998.)
புற இணைப்புகள்
[தொகு]- பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் நகிப் மஹ்ஃபூஸ்
- Naguib Mahfouz on his English publisher's website பரணிடப்பட்டது 2007-08-25 at the வந்தவழி இயந்திரம்
- Naguib Mahfouz – The Son of Two Civilizations at Nobel Prize website
- Petri Liukkonen. "Naguib Mahfouz". Books and Writers (kirjasto.sci.fi). Archived from the original on 4 July 2013.
- BBC Obituary
- The 100th Anniversary of the Birth of Naguib Mahfouz at Qantara.de
- Mahfouz Centennial Celebrations 2011 பரணிடப்பட்டது 2017-12-09 at the வந்தவழி இயந்திரம் at The American University in Cairo Press