Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

நீ. வ. அந்தோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலைக்குரிசில் அண்ணாவியார் நீ. வ. அந்தோனி
பிறப்புஅண்ணாவியார் நீ .வ அந்தோனி
(1902-03-04)மார்ச்சு 4, 1902
யாழ்ப்பாணம்
இறப்புசனவரி 20, 1971(1971-01-20) (அகவை 68)
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுகலைப்பணி
சமயம்கத்தோலிக்கம்
பெற்றோர்தந்தை வயித்தியான், தாய் மதலேனா
பிள்ளைகள்அந்தோனி சவிரிமுத்து
வலைத்தளம்
கலைக்குருசில்

கலைக்குருசில் அண்ணாவியார் நீ. வ. அந்தோனி (4 மார்ச் 1902 - 20 சனவரி 1971) ஈழத்தின் பிரபலமான நாட்டுக்கூத்துக் கலைஞரும், அண்ணாவியாரும் ஆவார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

யாழ்ப்பாண நகரில் 1902ம் ஆண்டு பங்குனி திங்கள் 4ம் நாள் அந்தோனி அண்ணாவியார், வயித்தியான், மதலேனா ஆகியோருக்குப் பிறந்தார்.[2]

தொழில் முயற்சி

[தொகு]

1923ம் ஆண்டு நாவாந்துறையை விட்டு மீனவத் தொழிலில் ஈர்க்கப்பட்டு ஊர்காவற்துறையின் தென்திசையில் கரம்பொன் தெற்குப் பகுதியில் குடியேறி தொழிலில் ஈடுபடலானார்.

கலைத்துறையில் ஈடுபாடு

[தொகு]

இயல்பாகவே குரல்வளம் பெற்றிருந்த அந்தோனிக்கு பாரம்பரியக் கலையான கூத்தின் மீது ஆர்வம் ஏற்படவே, 1928-ஆம் ஆண்டில் தனது 26வது வயதில் கரம்பொன் செபஸ்தியார் கோவில் அருகாமையில் மேடையேற்றப்பட்ட "மத்தேசு மகிறம்மா" என்னும் நாட்டுக்கூத்தில் நடித்தார். இக்கூத்தின் மூலம் ஏற்பட்ட பட்டறிவைக் கொண்டு, கோவில் திருவிழாக் காலங்களில் பாடப்படும் கவி, தேவாரம், விருத்தம், அகவல் போன்றவற்றை எழுதிப்பழக்கி, பாடிவித்து வந்தார்.

இரண்டாவது கூத்தான ஊசோன்பாலந்தையை காட்சியமைப்புக்கு ஏற்றவாறு பல பாடல்களை புதிதாக எழுதி மீள் வடிவமிட்டு 1931-ஆம் ஆண்டு கரம்பொனில் மேடையேற்றியதுடன், அக்கூத்தின் முக்கிய பாத்திரமாகிய பெப்பேனிய அரசராக இரண்டு இரவுகள் தொடராக பாடல், நடிப்பு, நெறியாள்கை என பன்முகத் தன்மையை வெளிப்படுத்தினார்.

ஊசோன்பாலந்தை கூத்து நாடக வரலாற்றில் பெரிய மாறுதலை ஏற்படுத்தவே, மாதகல், முல்லைத்தீவு, பருத்தித்துறை, மண்டைதீவு, எழுவைதீவு, மன்னார், நாரந்தனை எனப் பல்வேறு பிரதேச மக்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்று பல கூத்துக்களை மேடையேற்றி மிகவும் பிரபலமானார்.

அண்ணாவியாரின் தனித்தன்மையின் சிறப்புகள் இராகங்களை இனிமையாகப்பாடி நடித்துக் காட்டுவதுடன், நடிக்கும்போது காட்சிக்கு ஏற்றவாறு பாவத்துடன் ஒன்றிப்பாடவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். எந்த மெட்டையும் சுருதியுடன் உடனுக்குடன் பாடும் திறமை நாடகப்பிரியர்களை வியப்புற வைத்தது.

அலசு நாடகத்தை தென்மோடிக்கூத்தாக, ஓர் செதுக்கிய ஓவியமாக வடித்து 1956ம் ஆண்டு கரம்பனில் அரங்கேற்றினார். அலசு நாட்டுக்கூத்தில் அண்ணாவியாரால் எழுதப்பட்டு, பிரபல பாடகரான திரு.வைத்தியார் அவர்கள் பெமியான் பிரபு வேடத்தில் பாடிய "ஞானக்கலையுணர்ந்த" என்ற மிகவம் பிரபலமான பாடலும், இ. மத்தியாஸ் அவர்கள் அலசு பாத்திரத்தில் பாடிய "பிச்சை போடும் அண்ணாமாரே என்னும் சோகமிழையோடும் பாடல் வரிகளும் பல தலைமுறை கடந்தும் இன்றும் இளைஞர்களால் விருப்புடன் பாடப்படுகின்றது.

1960ம் ஆண்டு வடமாகாண கலை, கலாச்சாரப் பிரிவால் நடத்தப்பட்ட கலை கைப்பணி விழாவிற்கு கலைக்குரிசில் சங்ககாலத்தில் தமிழன் கப்பல் மூலம் வணிகம் செய்த வரலாற்றை கப்பல் பாடலாக கூத்துமெட்டில் எழுதிக் கொடுத்தார். உழவியந்திரத்தில் பாரிய கப்பலை வடிவமைத்து நடிகர்கள் அதில் மாலுமிகளாக பாடி ஆடி நடித்தனர். அந்நிகழ்வு அரசின் மிகுந்த பாராட்டை பெற்றது. யாழ் நகரிலிருந்து ஊர்காவற்றுறை வரை நடிகர்கள் கப்பல் ஊர்தியில் நின்றபடி நடிக்க, வீதி இருபக்கமெங்கும் மக்கள் குழுமி நின்று மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பார்வையிட்டனர்.

1931ம் ஆண்டு முதல், 1971ம்ஆண்டு வரை தானும், பல புலவர்களும் எழுதிய 50 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களை யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல இடங்களில் மேடையேற்றியதுடன் களப்பயிற்சியின் ஊடாக பல சிறந்த நடிகர்களை உருவாக்கியுள்ளார்.

1965ம் வருடம் கரம்பொன் சிறிய புஸ்பமகளிர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நாடகப் போட்டியில் கலைக்குரிசில் தான் எழுதிய தாவீது கொலியாத் எனும் நாட்டுக்கூத்தை, இளம் தலைமுறை மாணவர்களை வைத்து நெறிப்படுத்தி முதன்மை விருது பெற்று கெளரவிக்கப்பட்டார்.

கலைக்குரிசில் பட்டம்

[தொகு]

அண்ணாவியாரின் கலைப்பணியை இனங்கண்டு 1969ம் ஆண்டு பெப்ரவரி 3ம் நாள் கலையரசு கே. சொர்ணலிங்கம் அவர்கள் புனித கிறிஸ்தோப்பர் நாடகவிழாவில் "கலைக்குரிசில்" என்னும் பட்டமளித்து பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

எழுதி மேடையேற்றிய கூத்துகள்

[தொகு]
  • ஞானானந்தன்
  • அலசு
  • சகோதரவிரோதி
  • புனித செபஸ்தியார்
  • மதிவீரன்
  • பிரதாபன்
  • மந்திரிகுமாரன்
  • இராஜ குமாரி
  • தர்மசீலன்
  • திரு ஞானதீபன்
  • பிரளயத்தில் கண்ட பாலன்
  • தொம்மையப்பர்
  • பிரபாகரன்
  • தாவீது, கொலியாத்து
  • ஆனந்தசீலன்
  • புனித கிறிஸ்தோப்பர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'கலைவருணன் அந்தோனி சவிரிமுத்து' அவர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கல்". லங்காசிறி. 2 அக்டோபர் 2016. Archived from the original on 22 சூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்பிரல் 2024.
  2. 2.0 2.1 ஈழத்தமிழர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பிரபல நாடக கலைஞரின் ஆவணப்படம், Tamil Murasu Australia, 19 சூன் 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ._வ._அந்தோனி&oldid=3945156" இலிருந்து மீள்விக்கப்பட்டது