நீரியல் வளர்ப்பு
நீரியல் வளர்ப்பு அல்லது மண்ணில்லா வேளாண்மை (hydroponics) என்பது நீர் வேளாண்மையின் ஒரு துணைக்குழு ஆகும். மண் இல்லாமல் கனிம ஊட்டக்கூறுகளைக் கொண்ட நீர்ம வளர்ப்பூடகக் கரைசல்களைப் பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கும் ஒரு முறையாகும்.[1] நிலத்தடி செடிகளின் வேர்கள் மட்டுமே கனிம ஊட்டச்சத்துள்ள ஊடகத்தில் இருக்குமாறு வளர்க்கப்படுகிறது, அல்லது மண்ணிற்குப் பதிலாக மெருகேறிய பளிங்கு உருள்மணிகள் (perlite) அல்லது கூழாங்கற்கள் போன்ற செயலற்ற ஊடகத்தைப் பயன்படுத்தி வேர்களுக்கு பிடிப்பு தன்மை செய்யப்படுகிறது. மண்ணில்லா விவசாயத்திற்கான ஊட்டச்சத்துக்கள் பல்வேறு மூல ஆதாரங்களிலிருந்து கிடைக்கின்றது, ஊட்டச்சத்துக்களும் வீணடிக்கப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல், மீன் கழிவுகள், வாத்து கழிவுகள் அல்லது சாதாரண உரம் போன்ற பிற சத்துக்களை ஊட்ட சத்துக்களாக தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். தவிடு, தென்னை நார் படுக்கை, கம்பளி முதலான பொருள்களும் ஊடகங்களாக பயன்படுத்தலாம்.[2]
ஆராய்ச்சியாளர்கள் தாவரங்கள் தமக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நீரில் கரைந்துள்ள சில கரிம மூலகங்களை உறுஞ்சிப் பெற்றுக்கொள்வதை 19 ஆம் நூற்றாண்டுகளில் கண்டறிந்தனர். உண்மையில் தாவரங்கள் உறுஞ்சிப் பயன்படுத்தக்கூடிய நிலையில் ஊட்டச்சத்துகளை மாற்றிப் பேணுவதே மண்ணின் செயற்பாடு ஆகும். ஆகவே நீரில் கரைந்த நிலையில் நேரடியாக தாவரத்தால் உறுஞ்சிப் பயன்படுத்தகூடிய நிலையிலான போசணை ஊடகத்தை வழங்குவது மண்ணின் பயன்பாட்டை இல்லாதாக்கும் என்ற சிந்தனையை வளர்த்தது.
வரலாறு
[தொகு]நிலம்வாழ் தாவரங்களை மண்ணின்றி வளர்ப்பது பற்றிய முதலாவது வெளியீடு பிரான்சிசு பேகனின் 1627 இல் வெளியிடப்பட்ட Sylva Sylvarum நூல் ஆகும். இதன் பின்பே நீரியல் வளர்ப்பு பிரபலமடைந்தது.1699 இல் ஜோன் வுட்வார்ட் தனது நீர்ச் செய்கை பரிசோதனைகளை வெளியிட்டார். இவர் தூய நீரில் வளர்வதைவிட தூய்மை குறைந்த நீரில் நன்கு வளர்வதாகக் காட்டினார். 1842 களில் தாவர வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்பது மூலகங்கள் அறியப்பட்டுப் பட்டியலிடப்பட்டதுடன் செருமனிய தாவரவியலாளர்களான யூலியாஸ் வொன் சாச்ஸ் மற்றும் வில்கேம் கொப் ஆகியோர் 1859-65 காலப்பகுதியில் மண்ணில்லா வளர்ப்பு முறையைக் கண்டறிந்தனர்.[3] தரை வாழ் தாவரங்களை இவ்வாறான போசனை ஊடகத்தில் வளர்ப்பது கரைசல் வளர்ப்பு என அழைக்கப்பட்டது. இது ஒரு நெறிப்படுத்தப்பட்ட பரந்துபட்ட ஆராய்ச்சியாக இன்று வளர்ந்துள்ளது. கரைசல் வளர்ப்பும் ஒருவகை நீரியல் வளர்ப்பு ஆகும். ஆனால் இதில் ஆதார ஊடகம் வழங்கப்படுவதில்லை.
1929இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ப்ரேடெரிக் ஜெரிக் என்பவர் வேளாண்மை உற்பத்தியில் கரைசல் வளர்ப்பு முறை பயன்படுத்தக்கூடியது என்பதைப் பிரபல்யப்படுத்தினார்.[4] ஜெரிக் தனது கொல்லையில் 25 அடிகள் உயரமான தக்காளிச் செடிகளை மண்ணில்லாத போசணைக் கரைசலில் வளர்த்து அதன் மூலம் ஈடுபாட்டை ஏற்படுத்தினார்.[5] வேளாண்மை என்பதற்கான பண்டைய கிரேக்கப் பதமாகிய 'geoponics' அதாவது 'மண்ணைப் பண்படுத்தும் அறிவியல்' என்பதிலிருந்து 1937 இல் நீரியல் வளர்ப்பு என்பதன் ஆங்கிலப் பதமாகிய hydroponics ஐ ஜெரிக் உருவாக்கினார்.{ஆயினும் அவர் இப்பதம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த W. A. Setchell என்பவரால் முன்மொழியபட்டதாக உறுதிப்படுத்துவார்).[3]
ஜெரிக்கின் ஆய்வறிக்கை மற்றும் நீரியல் வளர்ப்பு தாவர வேளாண்மையில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதான அவரது அறிவிப்புகள் அது பற்றிப் பல மேலதிக விபரங்களையும் கேள்விகளையும் எழுப்பின. ஜெரிக் தனது சொந்த நேரத்தையும் வீட்டுத்தோட்டத்தையும் பயன்படுத்தியே இவ்வாய்வுகளைச் செய்ததாகக் கூறி இவற்றை வெளியிட மறுத்தார். இதன் அடிப்படையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினார். 1940 இல் நீரியல் வளர்ப்பு பற்றிய தனது நூலான Complete Guide to Soilless Gardening ஐ வெளியிட்டார்.
ஜெரிக்கின் வெளியீடுகளை ஆராய்ச்சி செய்வதற்காக கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றுமிரு தாவரவியலாளர்களை நியமித்தது. டெனிஸ் R. கொக்லண்ட்[6] மற்றும் டானியல் I. ஆர்ணன்]][7] ஆகியோர் 1938 இல் " மண்ணின்றிய தாவர வளர்ப்பில் நீர்ச் செய்கை முறைகள்" எனும் கட்டுரையை வெளியிட்டனர் [8]. நீரியல் வளர்ப்பு, வளமான மண்ணை விட பயிர் விளைச்சலுக்கு உகந்ததல்ல என்பதை இவர்கள் கண்டறிந்தனர். பயிர் விளைச்சல் போசணை மூலகங்களை விட மற்றும் பல காரணிகளால் (முக்கியமாக ஒளி) கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி மேலும் பல நேர்வுளையும் கண்டறிந்தது. அதாவது நீரியல் வளர்ப்பு தாவர வேர்களுக்கு மாறாத அளவு ஒட்சிசனை வழங்குவதும் , தாவரம் தனது தேவைக்கேற்ற அளவு நீரை பயன்படுத்தக் கூடியதாயிருப்பதுமான அனுகூலங்களை உடையன.
நீரியல் வளர்ப்பின் மற்றொரு ஆரம்பவெற்றி வேக் தீவில் நிகழ்ந்தது. பசிபிக் பெருங்கடலில் உள்ள வேக் தீவு வேக் தீவு முழுக்க பவளப் பாறைகளால் ஆனது. இங்கு பான் அமெரிக்கன் எயர்லைன்ஸ் எரிபொருள் நிரப்ப தரிக்கிறது. ஆகவே 1930 இதிலிருந்து பயணிகளுக்குத் தேவையான மரக்கறி நீரியல் வளர்ப்பு மூலம் செய்கை பண்ணப்படுகிறது.
நன்மைகள்
[தொகு]உலகெங்கும் பின்வரும் நோக்கங்களுக்காக நீரியல் வளர்ப்புச் செய்யப்படுகின்றன:
- இதற்கு மண் தேவையில்லை.
- இதன் தொகுதில் பயன்படுத்தப்படும் நீர் மீளப்பயன்படுத்தத்தக்கது. ஆகவே நீர்ச் செலவு குறைவு.
- தாவரத்தின் வளர்ச்சி முழுமைக்குமான ஊட்டச்சத்து மட்டத்தைத் தீர்மானித்தல் சாத்தியம். ஆகவே ஊட்டச்சத்துக்கான செலவு குறைவு.
- கட்டுப்படுத்தபட்ட தொகுதி என்பதால் சூழலுக்கு வளமாக்கிக் கழிவுகள் வெளியிடப்படுவதில்லை.
- மாறாத உயர் விளைச்சல்.
- நோய்களைக் கட்டுப்படுத்துவது இலகு. ஏனெனில் இத்தொகுதி நகர்த்தப்படக்கூடியது.
இன்று பயிராக்கவியலில் நீரியல் வளர்ப்பு முக்கியத்துவமுடையதாக உள்ளது. இதன் பலாபலன்கள் சிறப்பாகவும் அடையக்கூடியதாகவும் இருப்பதால் பல நாடுகளில் இது பின்பற்றப்படுகிறது. இரு முக்கிய காரணங்கள்:
- நீரியல் வளர்ப்பு உயர்வான உற்பத்தியைத் தரக்கூடியது.
- நிலமின்மையால் பயிர் செய்யமுடியாத இடத்திலும் பயிரிடலாம்.
பிரதிகூலங்கள்
[தொகு]நீரியல் வளர்ப்பு நிலையான போசனை ஊடகமும் ஈரலிப்பான சூழலும் சல்மோனேல்லாக்களின் வளர்ச்சியைத் தூண்டும்.[9] இது தவிர வேர்டிசீலியம் வாடல், அடியழுகல் முதலான நோயாக்கிகளும் அதிக ஈரலிப்புச் சூழலில் அதிகம் தாக்கும். எனவே நீரியல் வளர்ப்புக்கு தனித்துவமான போசணை ஊடகம் மற்றும் கொள்கலன் தொகுதிகளை தயாரிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.[10]
நுட்பங்கள்
[தொகு]நீரியல் வளர்ப்பு இரண்டு முக்கிய வகைகளாகக் காணப்படும். அவை, கரைசல் வளர்ப்பு, ஊடக வளர்ப்பு என்பவையாகும். கரைசல் வளர்ப்பில் வேர்த் தொகுதியைத் தாங்குவதற்கு தாங்கும் ஊடகம் இருக்காது. ஊட்டச்சத்து ஊடகத்தில் நேரடியாக வளர்க்கப்படும். கரைசல் வளர்ப்பு மூன்று பிரதான வகைகளைக் கொண்டது. 1.நிலையான கரைசல் வளர்ப்பு 2. தொடர் சுற்றோட்ட கரைசல் வளர்ப்பு 3. வளிவளர்ப்பு
ஊடக வளர்ப்பில் திண்ம ஊடகத்தாலான தாங்கும் ஊடகம் வேர்த்தொகுதிக்கு வழங்கப்படும்.
ஆதாரம்
[தொகு]- ↑ Santos, J. D. et al (2013) Development of a vinasse nutritive solutions for hydroponics. Journal of Environmental Management 114: 8-12.
- ↑ http://www.academia.edu/8296036/Soil-less_culture_in_modern_agriculture
- ↑ 3.0 3.1 Douglas, James S., Hydroponics, 5th ed. Bombay: Oxford UP, 1975. 1-3
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2009-12-29. பார்க்கப்பட்ட நாள் 2011-04-13.
- ↑ Turner, Bambi. "How Hydroponics Works." 20 October 2008. HowStuffWorks.com. [1] 17 September 2009.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-04-30. பார்க்கப்பட்ட நாள் 2011-04-15.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-04-30. பார்க்கப்பட்ட நாள் 2011-04-15.
- ↑ "The Water Culture Method for Growing Plants Without Soil" (PDF). Archived from the original (PDF) on 2011-04-30. பார்க்கப்பட்ட நாள் 2011-04-15.
- ↑ 10:49 a.m. ET (2009-03-04). "Alfalfa Sprouts Source Of Salmonella, Experts Say - Omaha- msnbc.com". MSNBC. Archived from the original on 2009-03-05. பார்க்கப்பட்ட நாள் 2009-03-14.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Winterborne, J., "Hydroponics: Indoor Horticulture",Published by Pukka Press, 2005, p113.