மகாவீரர்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மகாவீரர் 24ஆம் சைன தீர்த்தங்கரர் | |
---|---|
மகாவீரரின் குறும்படம் | |
விவரங்கள் | |
மாற்றுப் பெயர்: | வர்த்தமானர் |
வரலாற்று நாள்: | பொ.ஊ.மு. 599 – 527 |
தந்தை: | சித்தார்த்தன் |
அன்னை: | திரிசாலா (பிரியாகர்ணி) |
பரம்பரை: | இச்வாகு |
பிறப்பு: | குன்டலகிராமா,வைசாலி |
நிர்வாணா: | பாவாபுரி |
நிறம்: | மஞ்சள் |
சின்னம்: | சிங்கம் |
உயரம்: | 6 அடி |
இறக்கையில் வயது: | 72 ஆண்டுகள் |
யட்சன்: | மதாங்கன் |
யட்சினி: | சித்தாயிகா |
மகாவீரர் (இந்தி:महावीर), பொ.ஊ.மு. 599 – 527[1] என்று குறிப்பிடப்படுபவர் சைன சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் என்ற இந்திய துறவியாகும். சமண சமய வழக்கில் அவர் 24வது மற்றும் கடைசி அருகன் ஆவார் [2] சைன சமயப் புத்தகங்களில் இவர் வீரர், வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.
மகாவீரரின் வாழ்க்கை வரலாறு
[தொகு]வர்த்தமானாக இளவரசர் பிறப்பு
[தொகு]இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்றவிடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சைத்ர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (கிரெகொரியின் நாட்காட்டியில் ஏப்ரல் 12) அன்று பிறந்தார். அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே அரசருக்கும் அரசாட்சிக்கும் செல்வம் மற்றும் பிற வளங்களை பெருக்கியதாக நம்பப்படுகிறது;காட்டாக அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி. எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய வர்த்தமானன் என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசி திரிசாலாவும், மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், கருவுற்றிருக்கையில் 14 (சுவேதம்பர் வழிமுறையில் 14, திகம்பர் வழிமுறையில் 16) சுப கனவுகளைக் கண்டதாகவும் கூறப்படுகிறது.[3][4]
சைன சமய நம்பிக்கைகளின்படி, பிறப்பினையடுத்து தேவலோக அரசன் இந்திரன் ஓர் எதிர்கால தீர்த்தங்கரருக்கு உரித்தான பால் அபிசேகம் உற்பட சடங்குகளைச் செய்வித்து அன்னையிடம் கொடுத்ததான்.
உலகெங்கும் உள்ள சைனர்கள் அவரது பிறந்தநாளை மகாவீரர் ஜெயந்தி எனக் கொண்டாடுகின்றனர்.
சிறுவயது
[தொகு]சித்தார்த்தனின் மகனாக இளவரசனாக வாழ்ந்தார் வர்த்தமானன். இருப்பினும் அச்சிறுவயதிலும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். தியானத்திலும் தன்னறிவதிலும் கூடுதல் நாட்டமுடையவராக விளங்கினார். மெதுவாக உலக சிற்றின்பங்களிலிருந்து விலகி சைன சமய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.
பன்னிரெண்டாண்டுகள் ஆன்மீகத் தேடல்
[தொகு]தமது முப்பதாவது வயதில் அரசாட்சி மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டார். துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மீகத்தேடலில் ஈடுபட்டார். பிற உயிரினங்களுக்கு (மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள்) மதிப்பளித்தார். அவற்றிற்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார். இவ்வாண்டுகளில் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவரது பொறுமையும் வீரமுமே அவர் மகாவீரர் என அழைக்கப்பட காரணமாயிற்று. இந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக கைவல்ய ஞானம் கிடைக்கப்பெற்றார். அச்சமயம் அவர் அளவற்ற சமசீர்மை, அறிவு மற்றும் கட்டுப்பாடு கொண்டவராக இருந்தார்.
பின்னாள் வாழ்க்கை
[தொகு]மகாவீரர் தமது எஞ்சிய நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே தாமறிந்த ஆன்மீக விடுதலையின் வரையற்ற உண்மையை பரப்பத் துவங்கினார். வெறும் கால்களில் துணிகள் எதுவுமன்றி கடுமையான காலநிலைகளில் பயணம் செய்த அவரின் பேச்சைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சைன சமயம் இந்தியாவெங்கும் பரவியது. தமது 72ஆவது வயதில் பாவாபுரி என்னுமிடத்தில் இந்திய நாட்காட்டியில் தீபாவளியின் கடைசி நாளன்று நிர்வாணம் எய்தினார். அவர் பேறு பெற்ற இந்நாளை சைனர்கள் கொண்டாடுகிறார்கள். அவர் பொ.ஊ.மு. 599 முதல் 527 வரை வாழ்ந்ததாக ஜைனர்கள் நம்பினாலும் சில வரலாற்றாசிரியர்கள் பொ.ஊ.மு. 549–477 காலத்தவராக கருதுகிறார்கள்.[5]
மகாவீரரின் மெய்யியல்
[தொகு]மகாவீரரின் மெய்யியலில் முதன்மையாக எட்டு கொள்கைகள் உள்ளன - மூன்று கருத்துமயமானவை மற்றும் ஐந்து நெறிவழிப்பட்டவை. குறிக்கோள் வாழ்வின் தரத்தை உயர்த்துவதேயாகும். இந்த தனிப்பட்ட எட்டு கொள்கைகளும் குறிக்கோளை நோக்கிய ஓர்மையும் நெறிவழிப்பட்ட வாழ்வின்மூலம் ஆன்மீக வளமை பெற்றிடும் வழியையும் காட்டுவனவாக உள்ளன. அவரது கருத்தியலில் மூன்று கொள்கைகள் உள்ளன: அநேகாந்தவாதம், ஸ்யாதவாதம் மற்றும் கர்மம். ஐந்து நெறிவழிகளாவன:அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், பிரமச்சரியம், அபரிகிருகம்.
மகாவீரர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும் அது தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக கர்மா எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது என்றும் கூறுகிறார். கர்மாவின் மாயையால் ஒருவர் தற்காலிக மற்றும் மெய்போன்ற இன்பங்களிலும் பொருள் சேர்க்கையிலும் கவரப்படுகிறான். இவற்றின் தேடலில் அவனுக்கு சுயநலமுள்ள வன்முறை எண்ணங்களும் செயல்களும் கோபம், வெறுப்பு, பொறாமை மற்றும் பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன. இவற்றால் அவனது கர்மம் பளு கூடுதலாகிறது.
இதனிலிருந்து விடுபட, மகாவீரர் சரியான நம்பிக்கை (சம்யக்-தரிசனம்), சரியான அறிவு (சம்யக்-ஞானம்), மற்றும் சரியான நடத்தை (சம்யக்-சரித்திரம்') தேவை என்பதை வலியுறுத்தினார். நன்னடத்தைக்கு துணைநிற்க ஜைன மதத்தில் ஐந்து உறுதிமொழிகள் எடுக்க வேண்டும்:
- வன்முறை தவிர்த்தல் (அகிம்சை) - எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காதிருத்தல்;
- வாய்மை (சத்தியம்) - தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல்;
- திருடாமை(அஸ்தேயம்) - தனக்கு கொடுக்கப்படாதது எதையும் எடுத்துக் கொள்ளாதிருத்தல்;
- பாலுறவு துறவு (பிரமச்சரியம்) - பாலுணர்வு இன்பம் துய்க்காதிருத்தல்;
- உரிமை மறுத்தல்/பற்றற்றிருத்தல் (அபரிகிரகம்) - மக்கள்,இடங்கள் மற்றும் பொருளியலில் பற்று அற்று இருத்தல்.
கருத்தியல் கொள்கைகளான உண்மை ஒரேஒன்றல்ல என்ற அநேகாந்தவாதம் மற்றும் சார்நிலைக் கொள்கையான ஸ்யாதவாதம் இவற்றை கொள்ளாமல் இந்த உறுதிமொழிகளை முழுமையாக கடைபிடிக்க வியலாது. இவற்றை ஆண் மற்றும் பெண் துறவிகள் நிச்சயமாகக் கடைபிடிக்க வேண்டும்;பிறர் அவர்களால் எந்தளவு இயலுமோ அந்தளவு கடைபிடித்தால் போதுமானது.
மகாவீரர் ஆண்களும் பெண்களும் ஆன்மீக நோக்கில் சரிசமனானவர்கள் என்றும் இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியுமென்றும் கூறினார். அவரை அனைத்து தரப்பு மக்களும் (சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்கள் உட்பட) பின்பற்றினர். வருணாசிரம முறையை விலக்கி புதிய நான்கு நிலைகளை உருவாக்கினார்;ஆண்துறவி (சாது),பெண்துறவி(சாதுவி),பொதுமகன் (ஸ்ராவிகர்) மற்றும் பொதுமகள் (ஸ்ராவிகை). இதனை சதுர்வித ஜைன சங்கம் என்று அழைக்கலாயினர்.
மகாவீரரின் பிரசங்கங்கள் அவரது உடனடி சீடர்களால் ஆகம சூத்திரங்கள் என வாய்மொழியாக பாதுகாக்கப்பட்டன. காலப்போக்கில் பல அகம் சூத்திரங்கள் இழக்கப்பட்டும், அழிக்கப்பட்டும், மாற்றப்பட்டும் சிலவே மிஞ்சின. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவை பனையோலைகளில் பதியப்பட்டன. சைனர்களின் ஒரு பிரிவினரான சுவேதம்பர்கள் இவற்றை அப்படியே உண்மையான போதனைகளாக ஏற்றுக் கொள்கின்றனர், ஆயின் மற்றொரு பிரிவினராகிய திகம்பரர்கள் இதனை ஓர் உசாத்துணையளவிலேயே ஏற்கின்றனர்.
சைன சமயம் மகாவீரரின் காலத்திற்கு முன்னரும் கடைபிடிக்கப்பட்டது. மகாவீரரின் போதனைகள் அவரது முன்னோரின் போதனைகளை பின்பற்றியதே. எனவே மகாவீரர் ஓர் நிகழ் மதத்தின் சீர்திருத்தவாதியே தவிர புதிய சமயத்தை உருவாக்கியவர் அல்லர். இவரது குருவான பரசுவந்த் தீர்த்தங்கரரின் வழிகளைப் பின்பற்றியவர். ஆயினும் தமது காலத்திற்கேற்ப சைன மத கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார்.
மகாவீரரின் நிர்வாணத்திற்குப் பிறகு சில நூற்றாண்டுகளில் சைன சமயம் சடங்குகள் மற்றும் பிற குழப்பங்களை உட்கொள்ள துவங்கியது. சில விமரிசகர்கள் மகாவீரரையும் பிற தீர்த்தங்கரர்களையும் இந்து மத கடவுளர் போன்று வழிபட துவங்கியதாக கூறுகின்றனர்.
மகாவீரரின் வாழ்க்கை வரலாறு நூல்கள்
[தொகு]மகாவீரரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல சைனப் கிரந்தங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது ஆசார்யர் பத்திரபாகு என்பவர் அருளிய கல்பசூத்திரங்கள் (புனித கொள்கைகள் நூல்) என்ற சைன சமய புத்தகம். சமசுகிருதத்தில் வந்த முதல் வாழ்க்கை வரலாறு 853ஆம் ஆண்டு அசகர் (அசோக முனிவர்) என்பவர் எழுதிய வர்த்தமானசரித்திரம் என்பதாகும்.[6]
இவை தவிர: "சிரமன் மகாவீரா" - ஆசார்யா மகாபிராக்யா ஆங்கிலத்தில்:
- "Lord Mahavira and his times" by Kailash Chand Jain (1991) Motilal Banarsidass Publishers PVT LTD Delhi (India)
- "Lord Mahavira (A study in historical perspective)" by Bool Chand ( 1987 ) P.V. Research Institute I.T.I Road Varanasi 5 (India)
- "Lord Mahavira in the eyes of foreigners" by Akshaya Kumar Jain ( 1975 ) Meena Bharati New Delhi 110003 (India)
மகாவீரர் ஜெயந்தி
[தொகு]மகாவீரரின் பிறந்த நாள் விழாவை, ஒவ்வொரு ஆண்டின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் சைத்திர மாதம், திரியோதசி திதி அன்று சமணர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[7]
Mathachurpu ==
- ↑ "Mahavira." Britannica Concise Encyclopedia. Encyclopædia Britannica, Inc., 2006. Answers.com 28 Nov. 2009. http://www.answers.com/topic/mahavira
- ↑ தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பாடநூல்.
- ↑ Mahavira JAINA TEACHER
- ↑ "Lord Mahavira". Archived from the original on 2019-02-26. பார்க்கப்பட்ட நாள் 2017-10-24.
- ↑ The Perennial Dictionary of World Religions. Keith Crim, editor. Harper & Row Publishers: New York, 1989. 451.
- ↑ Jain, Kailash Chand (1991). Lord Mahāvīra and his times, Lala S. L. Jain Research Series. Motilal Banarsidass. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120808053.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Concise Encyclopaedia of India - K.R. Gupta & Amita Gupta - Google Books. Books.google.com. 2006-01-01. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126906390. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.