Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

கொழுப்பு அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூடைரிக் அமிலம், ஒரு குறுந்தொடர் கொழுப்பு அமிலம்

கொழுப்பு அமிலம் (Fatty acid) என்பது நிறைவுற்ற அல்லது நிறைவுறாத, நீளமான, கிளைக்காத, கொழுப்பார்ந்த பின் தொடரியைக் கொண்ட கார்பாக்சிலிக் அமிலமாகும். இயற்கையில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் (நாலு முதல் இருபத்தியெட்டு வரை) கார்பன் அணுக்களைத் தொடரியாகக் கொண்டிருக்கும்[1]. சாதாரணமாகக் கொழுப்பு அமிலங்கள், டிரைகிளிசரைடு மற்றும் பாஸ்போகொழுமியத்திலிருந்து வருவிக்கப்பட்டவையாகும். கொழுப்பு அமிலங்கள் பிற மூலக்கூறுகளுடன் இணைக்கப்படாமல் இருக்கும்போது, தனிக்கொழுப்பு அமிலங்கள் என்றழைக்கப்படுகின்றன. கொழுப்பு அமிலங்கள் வளர்சிதை மாற்றத்திற்குப்பின் அதிக அளவு சக்தியைக் (ATP) கொடுப்பதால், இவை மிக முக்கியமான எரிபொருள் மூலங்களாகக் கருதப்படுகின்றன. பல்வேறு உயிரணுக்களும் தங்கள் சக்தி தேவைக்காகக் குளுக்கோசு அல்லது கொழுப்பு அமிலங்களை உபயோகப்படுத்திக் கொள்கின்றன. முக்கியமாக, இதயம் மற்றும் எலும்புத்தசைகள் கொழுப்பு அமிலங்களை மிகுதியாக விரும்புகின்றன. ஆனால், மூளையானது கொழுப்பு அமிலங்களை எரிபொருள் மூலமாகப் பயன்படுத்த இயலாது. மூளை குளுக்கோசு அல்லது கீட்டோன் உடலங்களைப் பயன்படுத்துகிறது.[2].

கொழுப்பு அமில வகைகள்

[தொகு]
சில கொழுப்பு அமிலங்களின் முப்பரிமாணத் தோற்ற மாற்றீடுகள்

இரட்டைப்பிணைப்பினைக் கொண்டவை நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் எனவும், இரட்டைப்பிணைப்பில்லாதவை நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவைகள் நீளத்திலும் வேறுபடுகின்றன.

தனிக்கொழுப்பு அமிலங்களின் நீளங்கள்

[தொகு]

தனிக்கொழுப்பு அமிலங்களின் தொடரிகள் நீளத்தில் (சிறிய, நடுத்தர மற்றும் நீளமான வடிவங்கள்) வேறுபடுகின்றன.

  • குறுந்தொடர் கொழுப்பு அமிலங்கள் (SCFA): ஆறுக்கும் குறைவான கார்பன் அணுக்களைக் கொழுப்பார்ந்தத் தொடரிகளாகக் கொண்ட கொழுப்பு அமிலங்கள் ( (உ-ம்) பியூடைரிக் அமிலம்).
  • நடுத்தரத்தொடர் கொழுப்பு அமிலங்கள் (MCFA): ஆறிலிருந்து பன்னிரண்டு வரையிலான கார்பன் அணுக்களைக் கொழுப்பார்ந்தத் தொடரிகளாகக் கொண்ட கொழுப்பு அமிலங்கள்[3].
  • நீள்தொடர்க் கொழுப்பு அமிலங்கள் (LCFA): பன்னிரண்டு கார்பன் அணுக்களுக்கும் அதிகமான கொழுப்பார்ந்தத் தொடரிகளைக் கொண்ட கொழுப்பு அமிலங்கள்[4].
  • நெடுநீள்தொடர்க் கொழுப்பு அமிலங்கள் (VLCFA): இருபத்தியிரண்டு கார்பன் அணுக்களுக்கும் அதிகமான கொழுப்பார்ந்தத் தொடரிகளைக் கொண்ட கொழுப்பு அமிலங்கள்.

நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள்

[தொகு]
மாறுபக்க மாற்றியம், எலைடிக் அமிலம் (மேல்) மற்றும் ஒருபக்க மாற்றியம், ஒலெயிக் அமிலம் - ஒப்பீடு

நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் கார்பன் அணுக்களுக்கிடையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டைப்பிணைப்புகளைக் கொண்டவையாகும். கொழுப்பார்ந்தத் தொடரியிலுள்ள இரட்டைப்பிணைப்புகளின் இருபக்கங்களிலும் உள்ள கார்பன் அணுக்கள் ஒருபக்கமாகவோ (சிஸ்)அல்லது மாறுபக்கமாகவோ (டிரான்ஸ்) அமைந்திருக்கும்.

ஒருபக்க அமைவடிவத்தில் பக்க ஹைட்ரசன் அணுக்கள் இரட்டைப்பிணைப்பின் ஒருபக்கத்திலேயே இருக்கும். இரட்டைப்பிணைப்பின் இறுக்கம் அமைவடிவத்தினை முடக்குவதால், ஒருபக்க மாற்றியத்தில், பக்கத் தொடரியானது வளைந்து கொழுப்பு அமிலத்தின் தளையற்ற வடிவமைப்பினைக் கட்டுப்படுத்துகின்றது. ஆனால், மாறுபக்க அமைவடிவத்தில் பக்க ஹைட்ரசன் அணுக்கள் இரட்டைப்பிணைப்பின் எதிர்-எதிர்ப் பக்கங்களில் இருப்பதால் மாறுபக்க மாற்றியத்தில் பக்கத் தொடரி அதிக அளவு வளைய வேண்டிய அவசியம் இல்லை. இதனால், நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களைப்போல இவை நேரான வடிவத்தினைக் கொண்டிருக்கும். இயற்கையில் காணப்படும் பெரும்பாலான நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களில் ஒவ்வொரு இரட்டைப் பிணைப்பையடுத்தும் மூன்று (சிலவற்றில் அதற்குக் குறைவாகக்) கார்பன் அணுக்கள் இருக்கும். இவை அனைத்துமே ஒருபக்கப் பிணைப்புகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான மாறுபக்க வடிவத்தினைக் கொண்ட கொழுப்பு அமிலங்கள் இயற்கையில் காணப்படுவதில்லை; இவை மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன. (எ-டு) ஹைட்ரசனாக்கம். பல்வேறு நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களுக்கிடையிலுள்ள, மேலும் நிறைவுற்ற – நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களுக்கிடையிலுள்ள, வடிவியல் வேறுபாடுகள் உயிரிய வளர்ச்சியிலும், கட்டமைப்புகளிலும் [(உ-ம்) செல் சவ்வுகள்] முக்கியப் பங்காற்றுகின்றன.

நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களின் உதாரணங்கள்
பொது பெயர் வேதி வடிவம் Δx C:D nx
மைரிஸ்டோலெயிக் அமிலம் CH3(CH2)3CH=CH(CH2)7COOH ஒருபக்க9 14:1 n−5
பால்மிட்டோலெயிக் அமிலம் CH3(CH2)5CH=CH(CH2)7COOH ஒருபக்க9 16:1 n−7
சாப்பியெனிக் அமிலம் CH3(CH2)8CH=CH(CH2)4COOH ஒருபக்க6 16:1 n−10
ஒலெயிக் அமிலம் CH3(CH2)7CH=CH(CH2)7COOH ஒருபக்க9 18:1 n−9
எலைடிக் அமிலம் CH3(CH2)7CH=CH(CH2)7COOH மாறுபக்க9 18:1 n−9
வேக்செனிக் அமிலம் CH3(CH2)5CH=CH(CH2)9COOH மாறுபக்க11 18:1 n−7
லினோலெயிக் அமிலம் CH3(CH2)4CH=CHCH2CH=CH(CH2)7COOH ஒருபக்க,ஒருபக்க912 18:2 n−6
லினோஎலைடிக் அமிலம் CH3(CH2)4CH=CHCH2CH=CH(CH2)7COOH மாறுபக்க,மாறுபக்க912 18:2 n−6
ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் CH3CH2CH=CHCH2CH=CHCH2CH=CH(CH2)7COOH ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க91215 18:3 n−3
அராகிடோனிக் அமிலம் CH3(CH2)4CH=CHCH2CH=CHCH2CH=CHCH2CH=CH(CH2)3COOHNIST ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க5Δ81114 20:4 n−6
இகோசாபென்டயினோயிக் அமிலம் CH3CH2CH=CHCH2CH=CHCH2CH=CHCH2CH=CHCH2CH=CH(CH2)3COOH ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க58111417 20:5 n−3
எருசிக் அமிலம் CH3(CH2)7CH=CH(CH2)11COOH ஒருபக்க13 22:1 n−9
டொகோசாஹெக்சாயினோயிக் அமிலம் CH3CH2CH=CHCH2CH=CHCH2CH=CHCH2CH=CHCH2CH=CHCH2CH=CH(CH2)2COOH ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க4710131619 22:6 n−3

அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள்

[தொகு]

மனிதர்களுக்குத் தேவையான, நம் உடலால் தேவையான அளவு உருவாக்க முடியாத, உணவிலிருந்து கிடைக்க வேண்டிய, கொழுப்பு அமிலங்கள் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் என்றழைக்கப்படுகின்றன. இரண்டு வகையான அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் உள்ளன: முதலாவதாக, மீத்தைல் முனையிலிருந்து கணக்கிடும்போது உள்ள மூன்றாவது கார்பன் அணுவிலிருந்து இரட்டைப் பிணைப்பு தொடங்குபவை (ஒமேகா-3 கொழுப்பு அமிலம்); மற்றொன்று மீத்தைல் முனையிலிருந்து கணக்கிடும்போது உள்ள ஆறாவது கார்பன் அணுவிலிருந்து இரட்டைப் பிணைப்பு தொடங்குபவை (ஒமேகா-6 கொழுப்பு அமிலம்).

கொழுப்பு அமிலங்களில், கார்பாக்சில் அமிலத் தொகுதியிலிருந்து கணக்கிடும்போது, ஒன்பது-பத்தாம் கார்பன் அணுக்களுக்குப் பின் இரட்டைப் பிணைப்புகளை மனிதர்களால் உருவாக்க முடிவதில்லை[5]. எனவே, லினோலெயிக் அமிலம் (LA) மற்றும் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (ALA) ஆகிய இரண்டும் இன்றியமையாக் கொழுப்பு அமிலங்களாகும். இவை தாவர எண்ணெய்களில் பரவலாகக் காணப்படுகின்றன. நம்மால் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தை நீள் தொடரிக் (n-3) கொழுப்பு அமிலமாக்கும் [இகோசாபென்டயினோயிக் அமிலம்; EPA) மற்றும் டோகோசாஹெக்சாயினோயிக் அமிலம் (DHA)] திறமை வரம்புக்குட்பட்டுள்ளதால், இவைகளையும் மீன் உணவிலிருந்து நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள்

[தொகு]

இரட்டைப் பிணைப்பற்ற, பன்னிரெண்டிலிருந்து இருபத்துநான்கு கார்பன் அணுக்கள் உள்ள, நீள்தொடரி கார்பாக்சில் அமிலங்கள் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களாகும். நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் ஹைட்ரசனைக் கொண்டு இரட்டைப் பிணைப்பைக் குறைப்பதன் மூலம் நிறைவு பெறுகின்றன. நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் ஒற்றைப் பிணைப்பை மட்டுமே கொண்டுள்ளதால், இதிலுள்ள ஒவ்வொரு கார்பன் அணுவும் இரண்டு ஹைட்ரசன் மூலகூறுகளைக் கொண்டுள்ளன (விதிவிலக்காக, தொடரி முடிவிலுள்ள ஒமேகா கார்பன் மூன்று ஹைட்ரசன்களைக் கொண்டுள்ளது).

நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களின் உதாரணங்கள்
பொது பெயர் வேதி வடிவம் கார்பன் எண்ணிக்கை:இரட்டைப்பிணைப்பு எண்ணிக்கை
காப்பிரிலிக் அமிலம் CH3(CH2)6COOH 8:0
காப்ரிக் அமிலம் CH3(CH2)8COOH 10:0
லாரிக் அமிலம் CH3(CH2)10COOH 12:0
மைரிஸ்டிக் அமிலம் CH3(CH2)12COOH 14:0
பால்மிடிக் அமிலம் CH3(CH2)14COOH 16:0
இஸ்டியரிக் அமிலம் CH3(CH2)16COOH 18:0
அராகிடிக் அமிலம் CH3(CH2)18COOH 20:0
பெஹெனிக் அமிலம் CH3(CH2)20COOH 22:0
லிக்னோசெரிக் அமிலம் CH3(CH2)22COOH 24:0
செரோடிக் அமிலம் CH3(CH2)24COOH 26:0

உணவு கொழுப்புகளில் கொழுப்பு அமிலங்கள்

[தொகு]

கீழ்காணும் அட்டவணையில் சில சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் உணவு கொழுப்புகளில் உள்ள கொழுப்பு அமிலங்கள், உயிர்ச்சத்து ஈ மற்றும் கொலஸ்டிரால் பொதிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன[6][7].

நிறைவுற்றவை ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலங்கள் பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் கொலஸ்டிரால் உயிர்ச்சத்து ஈ
கி/100கி கி/100கி கி/100கி மிகி/100கி மிகி/100கி
விலங்கு கொழுப்புகள்
பன்றிக் கொழுப்பு 40.8 43.8 9.6 93 0.00
வாத்துக் கொழுப்பு[8] 33.2 49.3 12.9 100 2.70
வெண்ணெய் 54.0 19.8 2.6 230 2.00
தாவர கொழுப்புகள்
தேங்காய் எண்ணெய் 85.2 6.6 1.7 0 .66
பனை எண்ணெய் (புல்லின மர எண்ணெய்) 45.3 41.6 8.3 0 33.12
பருத்திவிதை எண்ணெய் 25.5 21.3 48.1 0 42.77
கோதுமை முளை எண்ணெய் 18.8 15.9 60.7 0 136.65
சோயா அவரை எண்ணெய் 14.5 23.2 56.5 0 16.29
ஆலிவ் எண்ணெய் 14.0 69.7 11.2 0 5.10
சோள எண்ணெய் 12.7 24.7 57.8 0 17.24
சூரியகாந்தி எண்ணெய் 11.9 20.2 63.0 0 49.0 
குசம்பப்பூ எண்ணெய் 10.2 12.6 72.1 0 40.68
சணல் எண்ணெய் 10 15 75 0
காட்டுக்கடுகு/ரேப் விதை எண்ணெய் 5.3 64.3 24.8 0 22.21

மேற்கோள்கள்

[தொகு]
  1. IUPAC Compendium of Chemical Terminology (2nd ed.). International Union of Pure and Applied Chemistry. 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 052151150X. பார்க்கப்பட்ட நாள் 2012-01-06.
  2. Mary K. Campbell, Shawn O. Farrell (2006). Biochemistry (5th ed.). Cengage Learning. p. 579. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0534405215.
  3. Medscape: Free CME, Medical News, Full-text Journal Articles & More
  4. Christopher Beermann1, J Jelinek1, T Reinecker2, A Hauenschild2, G Boehm1, and H-U Klör2, "Short term effects of dietary medium-chain fatty acids and n-3 long-chain polyunsaturated fatty acids on the fat metabolism of healthy volunteers பரணிடப்பட்டது 2012-03-08 at the வந்தவழி இயந்திரம்"
  5. Cell Biology: A Short Course
  6. Food Standards Agency (1991). "Fats and Oils". McCance & Widdowson's the Composition of Foods. Royal Society of Chemistry.
  7. Ted Altar. "More Than You Wanted To Know About Fats/Oils". Sundance Natural Foods Online. Archived from the original on 2010-12-05. பார்க்கப்பட்ட நாள் 2006-08-31.
  8. U. S. Department of Agriculture. "USDA National Nutrient Database for Standard Reference". U. S. Department of Agriculture. Archived from the original on 2015-03-03. பார்க்கப்பட்ட நாள் 2010-02-17.

வெளி இணைப்புகள்

[தொகு]

கொழுப்பு அமிலம் குறித்த ஆங்கில கட்டுரைகள் உள்ள இணையகம்[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழுப்பு_அமிலம்&oldid=3583268" இலிருந்து மீள்விக்கப்பட்டது